"தீதும் நன்றும் பிறர் தர வாரா........"
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

உணர்வுப்பாலம்-WORLD PHOTOGRAPHIC DAY SPECIAL

ஒவ்வொரு வீட்டின்
உள் சுவற்றிலும்
கருப்பு வெள்ளையில் தொங்கும்
ஒரு பழைய புகைப்படம் சொல்லும்
ஒரு தலைமுறையின்
உன்னதத் தருணங்களை!
என் வீட்டிலும் அப்படியொரு
புகைப்படம் உண்டு!
நான் நேரில் காணாத என்
தாத்தாவின் திருவுருவம் கொண்டு!
ரேடியோ பெட்டியை கையில்
ஏந்தியபடி நிற்கும்
அவரின் போஸைப் பார்க்கையில்
அவர் அருகில் சிரிக்கும் பாட்டியின்
குறும்புச் சிரிப்பும்..
குழந்தை முகம் மாறா
என் அம்மாவின் உருவமும்
ஏதேதோ அதிர்வுகளை
உள்மனதில் உண்டாக்கி செல்லும்...
உள்ளிருக்கும் அளவற்ற உவகையினால்
நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்
ஒரு தலைமுறை உணர்வுப்பாலத்தை
ஒரு புகைப்படத்தால்
உயிர்ப்பித்த ஒரு உன்னத
புகைப்பட கலைஞனுக்கு!



புதன், 7 ஆகஸ்ட், 2013

வேலை இல்லை



எங்குமே தொலைக்கவில்லை
ஆனால்
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
வேலை!!!

நகரத்தில் வேலை தேடல்
நரகமே தேவலாம்!!!

பெருவேலை
பெருவசதி
பெருங்கனவு
எப்போதும் எனக்குண்டு
என் சிறு அறையில் இருந்தபடி!!!

ஜோதிடம் பலிக்கவில்லை
கனவும் பலிக்கவில்லை
தினமும் பசிக்கிறது
வீட்டில் பணம் அனுப்பவில்லை!!!!

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நட்பு சூழ் உலகு-FRIENDSHIP DAY SPECIAL!


பிஞ்சு வயசு நட்பு
பள்ளிக்கால நட்பு
பயணங்களில் கிடைத்த நட்பு
கல்லூரி நட்பு
காதலி தோழி ஆன நட்பு
தோழி காதலி ஆன நட்பு
தோல்வியில் கிடைத்த நட்பு
தாய்மையின் நட்பு
தந்தையின் நட்பு
அலுவலக நட்பு
ஆஸ்பத்திரியில் கிடைத்த நட்பு
முகநூல் நட்பு
முதுமை நட்பு
இன்னும் இன்னும் நிறைய நட்பு
இருக்கவே இருக்கு பூமியில்
இதுபோதும் இறைவா-எனக்கு தெரியும்
இனி உன்னால்
இதற்கு மேலும்..
வீரிய வரமொன்று
வழங்கிட முடியாதென்று!






புதன், 31 ஜூலை, 2013

தொலை(ந்த) பேசி

தீப்பெட்டியின் இருமுனைகளிலும்

நூலைக்கட்டி தொலை பேசிய தருணங்களை

சிலாகித்துச் சொன்னால்

சிரிக்கின்றன-இக்காலக்

குழந்தைகள்...

வளர்ந்துவிட்ட தொழில்நுட்பத்தால்

வழக்கொழிந்து போய்விட்டன

சின்னச் சின்ன சந்தோஷங்களும்...! 
 

செவ்வாய், 30 ஜூலை, 2013

வெள்ளந்தி

சைக்கிள் மட்டுமே

ஓட்டத் தெரிந்த

மழைக்கும் பள்ளிக்கு ஒதுங்காத

தூரத்து சொந்தமான

அண்ணன் ஒருவன்

கம்ப்யூட்டர் சொல்லித்தரியா?

என கேட்கையில்

அதிகம் அறிந்து வைப்பதில் தான்

ஆரம்பிக்கிறது சந்தோஷத்தின் முடிவென்று

எப்படி புரிய வைப்பேன்.....

அறியாமை கூட அறிவுதான்

அனைத்தும் அறிந்தவனாய்

எல்லோரையும் எச்சரிக்கையுடன்

ஏறிடும் என் அறிவைக்காட்டிலும்...
.
அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்...

வயதான பின்பும் குழந்தையாய் வாழ...

அவன் வெள்ளந்தியாகவே இருந்துவிடட்டும்...

என்னால் தான் முடியவில்லை!!!
                            சை.மஹபூப்ஜான்


UA-43378410-1