"தீதும் நன்றும் பிறர் தர வாரா........"

வியாழன், 19 செப்டம்பர், 2013

TNPSC தொலைந்த நிரந்தர பதிவெண்ணை மீண்டும் பெறுதல்


TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் UNIQUE ID என்று சொல்லப்படும் நிரந்தர பதிவெண்ணை வைத்திருப்பார்கள்.இது 5 வருடங்களுக்கு செல்லுபடியாகும்.சில நேரங்களில் நம் கவனக்குறைவால் பதிவு எண் அல்லது கடவுச்சொல் அல்லது இரண்டையும் மறந்திருப்போம் அல்லது தொலைதிருப்போம்.மீண்டும் நம் பதிவெண் மற்றும் கடவுச்சொல்லை பெற விரும்பினால் நீங்கள் admin@tnpscexams.net என்ற முகவரிக்கு  நீங்கள் 
முன்பே எந்த மின்னஞ்சல் முகவரியை TNPSC இல்  பதிவு செய்திருந்தீர்களோ 
அதிலிருந்து ஒரு கோரிக்கை செய்தியை அனுப்பினால் போதும்.
இரண்டொரு நாளில் தங்கள் பதிவெண் மற்றும் கடவுச்சொல் குறித்த தகவல்கள்
 தங்கள் மெயில் இன்பாக்ஸ் ஐ வந்தடையும்  

புதன், 18 செப்டம்பர், 2013

பைத்தியக்காரர்களின் நவீனத்துவம்-FACEBOOK

ஒரு பைத்தியம் என்ன செய்யும்,தனக்குத் தானே பேசும்,சிரிக்கும்,அழும்.அது பைத்தியம் என்பதால் நாம் அதை கண்டுகொள்வதில்லை..பைத்தியங்களும் நம்மை கண்டுகொள்வதில்லை.அப்படிப்பட்ட ஒரு மனநிலைதான் பேஸ்புக் பாவிக்கும் பலரின் தற்கால மனநிலையும்!
     எதை எழுதுகிறோம் என்பதில் அவர்களுக்கும் பொறுப்பில்லை.எதை ரசிக்கிறோம் என்பதில் ரசிப்பவர்களுக்கும் ரசனையில்லை.போகிறபோக்கில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு போகிறார்கள்.தனிமையில் நினைக்கும் அந்தரங்கங்களை கூட பொதுவாக பகிர்வதில் உள்ள உள சிக்கல்தான் நம்மை வேறொரு கேடுகெட்ட உலகிற்கு இட்டுச் செல்லும்!
     பிரபலம் எனும் போர்வை ஒருசில ஆயிரம் பேர்களால் போர்த்தப்பட்டதும்,அதில் ஒளிந்து கொண்டு இவ்வுலகை இரட்சிக்க வந்தவர்களாய் இவர்கள் எழுதும் ஆபாசங்களுக்கு அளவே இல்லை!
     எப்பா! பேஸ்புக் இலக்கியவாதிகளே பைத்தியக்காரனாய் இருங்கள்..அது உங்கள் சொந்த உரிமை.ஆனால் பொது இடங்களில் புகையிலையை மென்று எச்சில் துப்பிச் செல்வதைபோன்று ஆபாசங்களை எழுதும் எழுத்து ஜாலத்தை காட்ட சமூக வலைத்தளங்களை நாடாதீர்கள்.!அதில்தான் உங்களுக்கு விருப்பம் என்றால் யாராலும் எங்களை காப்பாற்ற முடியாது!!!

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

வாக்காளர் பட்டியல்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும்,அடையாள அட்டை இருப்பவர்கள் தங்கள் பெயர் பட்டியல் இருக்கிறதா என சரிபார்க்க வேண்டிய நேரம் இது.கீழே உள்ள நிரலில் சென்று உங்கள் பெயர் உங்கள் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளுங்கள் 
                                                                            
                                                             www.elections.tn.gov.in/eroll/

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

அழகிய உடற்கட்டு

உடற்பயிற்சி என்றால் சிலருக்கு அலாதி பிரியம்.அதிலும் உடல் எடையை குறைக்கவும்,கட்டுக்குள் வைக்கவும் அரும்பாடுபடுவார்கள்.உடல் எடை குறைக்க உதவும் உடற்பயிற்சிகளில் ஏரோபிக்ஸ்,யோகா,ரன்னிங்,வாக்கிங் போன்றவை முக்கியமான உடற்பயிற்சிகள்.உடல் எடை மேலாண்மையில் இவை முக்கியமான பங்கு வகிக்கின்றன.மேற்சொன்ன அனைத்தும் உடல் எடையை குறைக்க பயன்பட்டாலும்,ஒவ்வொருவருக்கும் “”BODY SHAPE” என்று சொல்லக்கூடிய அழகிய உடற்கட்டு மிக முக்கியம்..அழகான உடற்கட்டு ஒவ்வொருக்கும் ஒரு புத்துணர்வையும்,தன்னம்பிக்கையையும் தரும் என்பதில் ஐயமில்லை.அதற்கு ஜிம் வகை உடற்பயிற்சிகள் தான் ஒரே வழி..எல்லோராலும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்யும் அளவுக்கு நேரமோ,சூழலோ அமைவதில்லை..ஜிம் என்றால் ஆஜானுபாகுவான மனிதர்கள் மட்டும் செய்தால் போதும் நமக்கெதற்கு என்று விலகி வேடிக்கை பார்பவர்களும் உண்டு.ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும்,சிறிய உடல் வலி இருந்தாலும் ,நாட்கள் செல்ல செல்ல ஜிம் வகை பயிற்சிகளால் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் உங்களை வேறொரு உலகிற்குஅழைத்து சென்று  புதுமையாக உணர வைக்கும்.
     வாரம் முழுக்க ஜிம்மில் பலியாக கிடந்தது WORKOUT செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை..வாரத்தில் மூன்று நாட்கள் அதுவே அதிகம்.முழுமையான அர்பணிப்புடன் செய்யும் போது மூன்று நாட்களே போதும்..சிறப்பான,தகுதிவாய்ந்த வாய்ந்த மேற்பார்வையாளரின்  ஆலோசனையின் படி,அவரவர் உடல் வலுவுக்கேற்ப எடை கொண்டு மிதமாக தொடந்து செய்து வந்தால் கை மேல் பலன் நிச்சயம்.
சரியான மேற்பார்வையாளரோ,உடற்பயிற்சியாளரோ இல்லாத நிலையில் நீங்கள் உதவிக்கு கூகிள் ஆண்டவரை நாடலாம்..ஆம் YOUTUBE இல் MIKE CHANG WORKOUTS என்று தேடி பாருங்கள்.நான் பார்த்தவரையில் எளிமையான,தெளிவான உடற்பயிற்சிகளால் அசரடிக்கிறார் மனிதர்.உடற்பயிற்சி குறித்த தெளிவான IDEA உங்களுக்கு கிடைக்கும்.வாழ்த்துக்கள் !

  

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

தலைவா-VIKATAN SURVEY

தலைவா படம் பார்த்துடீங்களா? அப்படின்னா விகடனோட இந்த லிங்க் ல போய்ட்டு படத்த பத்தின உங்களோட கருத்த ஷேர் பண்ணிகோங்க பிரெண்ட்ஸ்......

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

விகடன் சர்வே!

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் முடிவு எப்படி இருக்கும் என்பதை முன்னரே கணிக்கும்  வகையில் விகடன் நடத்தும் இந்த இணைய சர்வேயில் கலந்து தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யவும்....
link:http://www.vikatan.com/new/special/survey/jv_survey.php 

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

உணர்வுப்பாலம்-WORLD PHOTOGRAPHIC DAY SPECIAL

ஒவ்வொரு வீட்டின்
உள் சுவற்றிலும்
கருப்பு வெள்ளையில் தொங்கும்
ஒரு பழைய புகைப்படம் சொல்லும்
ஒரு தலைமுறையின்
உன்னதத் தருணங்களை!
என் வீட்டிலும் அப்படியொரு
புகைப்படம் உண்டு!
நான் நேரில் காணாத என்
தாத்தாவின் திருவுருவம் கொண்டு!
ரேடியோ பெட்டியை கையில்
ஏந்தியபடி நிற்கும்
அவரின் போஸைப் பார்க்கையில்
அவர் அருகில் சிரிக்கும் பாட்டியின்
குறும்புச் சிரிப்பும்..
குழந்தை முகம் மாறா
என் அம்மாவின் உருவமும்
ஏதேதோ அதிர்வுகளை
உள்மனதில் உண்டாக்கி செல்லும்...
உள்ளிருக்கும் அளவற்ற உவகையினால்
நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்
ஒரு தலைமுறை உணர்வுப்பாலத்தை
ஒரு புகைப்படத்தால்
உயிர்ப்பித்த ஒரு உன்னத
புகைப்பட கலைஞனுக்கு!



புதன், 14 ஆகஸ்ட், 2013

தேசத்தின் முகம்!!!-A Independence Day Special!


காட்சி1:
இடம்: ராணுவ கூடாரம்...!
நாட்டை பாதுகாக்க அந்த நாட்டின் ஏதோ ஒரு எல்லையில் நிறுவப்பட்டிருந்தது...அதில் ஒரு போர்வீரன்..தன் அம்மாவுக்கு அவன் ஒரே மகன்..தந்தை ஏற்கனவே நாட்டிற்காக உயிர் துறந்தவர்..அம்மா  தனிமையில்...மகன் எல்லையில்..நீண்ட நாட்களாக ஆருயிர் அம்மாவை  காண விடுமுறைக்காக காத்திருக்கிறான்..அந்த நாளும் வருகிறது..புறப்பட இன்னும் சில நிமிடங்கள்..திடீரென யாரும் எதிர் பாராத நிலையில் எதிர்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்துகிறது..கடுமையான சண்டை...நிறைய உயிரிழப்பு..

காட்சி 2:ராணுவத்தின் மருத்துவ முகாம்!

போரில் சிதைவுற்றது அவன் முகம்..உடல் நிறைய காயங்களுடனும்..மனதில் தன் அம்மாவை  காணும் ஏக்கத்துடனும் எழுந்து நடக்கவும் திராணியற்று கிடக்கும் அவன் உடல்..நாட்கள் நகர்கின்றன..ஒரு அழகிய நாளில்..அவனையே அவனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள் கண்ணாடியில்...ஆம்! சிதைந்த முகத்திற்கு மாற்றாய் செப்பனிடப்பட்ட புதிய முகம்..முற்றிலும் வேறொருவனாய் தன்னையே தனக்கு உணர வைக்கும் முகம்! அந்த முகத்தில் அவன் தாயை காண அவனுக்கு துளியும் விருப்பமில்லை..ஆனால் அவன் தாயை பார்க்காமலும் இருக்க முடியவில்லை..அவனுக்கு ஒரு யோசனை..நம்மையே நம் நண்பன் என்று சொல்லிக்கொண்டு நம் வீட்டிற்கு சென்று அம்மாவை பார்ப்போம்...ஒருவேளை அம்மா நம்மை கண்டுபிடித்து விட்டால் உண்மையை சொல்லிவிட்டு கடைசி வரை அம்மவுடனே இருந்துவிடலாம்...இல்லையென்றால் பெற்ற அன்னைக்கே அடையாளம் தெரியாத நாம் அங்கிருப்பதை விட வாழ்நாள் வரை இப்போர்களத்திலேயே இருந்து மாண்டு விடலாம் என நினைத்து கிளம்புகிறான்..

காட்சி 3:
இடம்;அவன் வீடு!

கதவு தட்டப்படுகிறது...
அவன் அம்மா வந்து திறக்கிறார்...
”யாரப்பா நீ ” என்கிறார்..கேட்ட மாத்திரத்தில் அவன் கண்களில் நீர் வழிகிறது..மனதை திடப்படுத்திக்கொண்டு ”உங்கள் மகனின் நண்பன்..உங்களை பார்த்து உங்கள் மகன் கொடுத்தனுப்பிய இந்த பணத்தை கொடுத்துவிட்டு...இரண்டு நாட்கள் தங்கி இருந்துவிட்டு செல்லலாம் என உத்தேசம்” என்று கூறுகிறான்! அந்த இரண்டு நாட்களும் அவனுக்கு ராஜ உபசாரம்...மிகுந்த மனத்துயருடனும்,கட்டுக்கடங்காத கண்ணீருடனும் விடைபெற்று போர்க்களம் நோக்கி விரைகிறான்!

காட்சி4:
இடம்:ராணுவ முகாம்
அவன் வந்து சேர்ந்தற்கு பிந்தைய மூன்றாவது நாளில் அவன் தாயிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது...பிரித்து படிக்கிறான்..”மகனே! உன் நண்பன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்தான்..எனக்கென்னவோ அவன் நீயாக இருக்குமோ என்று சந்தேகம் இருக்கிறது..நீயாக இருந்தால் தயவு செய்து சொல்லிவிடு” என்று எழுதி இருக்கிறது...”நானே தான்” என்று கத்தி சொல்லவேண்டும் போல் இருந்தது அவனுக்கு..கடிதத்தை தூக்கிகொண்டு ஓடுகிறான்..கண்ணீர் சிந்தியபடி...இது ஆனந்தக்கண்ணீர்...

காட்சி 5:
இடம்:அவன் வீடு!
ஓடிச் சென்று அவந்தாயை கட்டிக்கொண்டு கேட்டான்
“எப்படியம்மா என்னை கண்டுபிடித்தாய்”
“உன் துணிகளை துவைக்கும் போது அதில் உன் வாசம் வந்ததடா! தாய்க்கு தெரியாதா மகனின் வாசம்”
“என்னை இந்த முகத்தோடு உனக்கு பிடித்திருக்கிறதா?”.என்று கேட்டான்..
அவன் அம்மா சொன்னால்
“இந்த முகத்தோடு தான் உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது..இதற்கு முன் உனக்கு இருந்த முகம் நானும் உன் தந்தையும் உனக்கு கொடுத்தது..ஆனால் இப்போதிருக்கும் இந்த முகமோ இந்த ‘தேசம்’ உனக்கு கொடுத்தது..!!!!!!!!!”
                  ஆம் நண்பர்களே! நம்மில் பல பேர் பத்திரிக்கையாளனாகவோ,மருத்துவராகவோ,அரசாங்க அதிகாரியாகவோ,அரசியல்வாதியாகவோ,மாணவனகவோ இருக்கிறோம் அல்லது இருக்க போகிறோம்! நம் சொந்த முகம் மறைத்து..நான் எனும் அகந்தையை விட்டு அகன்று,சுயநலம் பாராது பொதுநலம் பார்த்து,லஞ்சம்,ஊழல் இவை தவிர்த்து வலிமையான தன்னிறைவு பெற்ற,வலிமையான ஒரு தேசம் படைத்திட உறுதி ஏற்போம்..அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

பி.கு: இந்த கதை ரஷ்ய எழுத்தாளர் அலெக்ஸ் டால்ஸ்டாய் இன் தேசத்தின் முகம் என்ற கதை..சில திருத்தங்களுடன் என் எழுத்தில்..பிழை இருப்பின் மன்னிக்கவும்...
          


புதன், 7 ஆகஸ்ட், 2013

வேலை இல்லை



எங்குமே தொலைக்கவில்லை
ஆனால்
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
வேலை!!!

நகரத்தில் வேலை தேடல்
நரகமே தேவலாம்!!!

பெருவேலை
பெருவசதி
பெருங்கனவு
எப்போதும் எனக்குண்டு
என் சிறு அறையில் இருந்தபடி!!!

ஜோதிடம் பலிக்கவில்லை
கனவும் பலிக்கவில்லை
தினமும் பசிக்கிறது
வீட்டில் பணம் அனுப்பவில்லை!!!!

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நட்பு சூழ் உலகு-FRIENDSHIP DAY SPECIAL!


பிஞ்சு வயசு நட்பு
பள்ளிக்கால நட்பு
பயணங்களில் கிடைத்த நட்பு
கல்லூரி நட்பு
காதலி தோழி ஆன நட்பு
தோழி காதலி ஆன நட்பு
தோல்வியில் கிடைத்த நட்பு
தாய்மையின் நட்பு
தந்தையின் நட்பு
அலுவலக நட்பு
ஆஸ்பத்திரியில் கிடைத்த நட்பு
முகநூல் நட்பு
முதுமை நட்பு
இன்னும் இன்னும் நிறைய நட்பு
இருக்கவே இருக்கு பூமியில்
இதுபோதும் இறைவா-எனக்கு தெரியும்
இனி உன்னால்
இதற்கு மேலும்..
வீரிய வரமொன்று
வழங்கிட முடியாதென்று!






வியாழன், 1 ஆகஸ்ட், 2013

பிரியாணி-A Middle class Diet!


வந்துவிட்டது ரம்ஜான்!
ரம்ஜான் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது
அல்லாவும் அல்ல,இஸ்லாமும் அல்ல..
வேறென்ன “பிரியாணி” தான்...
இஸ்லாமியர்களின் ஆகச் சிறந்த உணவாக அது எப்போதோ
அடையாளப்படுத்தப் பட்டுவிட்டது.அதிலும் அவர்களின் கைமணத்தில்
உருவாகும் பிரியாணிகளுகென்று அங்கீகரிக்கபடாத ரசிகர் மன்றங்களே
உண்டு.ஒரு படத்தில் நடிகர் சிங்கமுத்து வாணியம்பாடி பஷீர் பாய் வீட்டு
கல்யாண பத்திரிக்கையை வைத்து ரகளை செய்து சிரிக்க வைப்பாரே
அதுபோல .
ஆனால்.....!?
ரம்ஜான் எல்லா இசுலமியர்களுக்கும் சிறப்பான அனுபவத்தை
தந்துவிடுவதில்லை..அது சிலருக்கு வரம் ...சிலருக்கு சாபம்..
ரம்ஜான் என்னை ஓடி ஒளிய வைத்திருக்கிறது,பொய் சொல்ல
வைத்திருக்கிறது,செல்போனை நாள் முழுக்க சுவிட்ச் ஆஃப் செய்ய
வைத்திருக்கிறது.
பணக்காரர்களுக்கும்,மிகவும் அடித்தட்டு இஸ்லாமியர்களும் அது வரம்!
பணக்காரர்களுக்கு ஏழைகளுக்கு தானம் செய்வதில் அல்லாவின் கருணை
பெற்றுவிட்டதாய் ஆனந்தம்! அடித்தட்டு இசுலாமியர்களுக்கோ நிச்சயம்
ஏதாவது ஒரு வழியில் உதவி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை!
அப்படியானால் யாருக்கு அது சாபம்??
நிச்சயமாக என்னால் சொல்ல முடியும் அது மிடில் கிளாஸ்
இசுலாமியர்களுக்குத் தான்!
யாரிடமும் யாசகம் கேட்பதில் அவர்களுக்கு துளி விருப்பமும்
இருப்பதில்லை..தானாக வந்து உதவி செய்பவர்களின் உதவியை பெற
அவர்களின் சுய கெளரவமும் இடம் தருவதில்லை.
“மச்சி நாளைக்கு எத்தனை மணிக்கு வரட்டும்” என்று ரம்ஜானுக்கு முந்தின
நாள் நண்பன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வட்டிக்கு கடன் வாங்க
சென்ற அப்பா வரும்வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது.வெற்றிகரமாக
அப்பா பணத்தோடு வரும்போது ஏற்படும் பெருமூச்சு அடங்குவதற்குள்
“நம்ம வீட்டு அளவுல  மட்டும் தான் செய்ய போறோம் யாரையும்
கூப்பிட்டுடாத” என்று அம்மா அடுத்த குண்டைவீசுகையில் தலை தொங்கிப்
போகும் .இந்த லட்சணத்தில் ரம்ஜான் செலவுக்கு பணம் கேட்கும் தம்பி
தங்கைகள் வேறு!
அந்த ஒருநாள் போலீசில் சிக்கிய பாலியல் தொழிலாளி
முகத்தை துணியால் மறைத்து செல்வது போலவும்,அந்தி சாய்ந்ததும்
வெளியே செல்லும் கடன்காரனுக்குமானதாய் இருவேறு மனநிலைகளில்
எதிரில் வரும் நண்பனை ஏறிட முடியாமல்
சிக்கித்தவிக்கும் ஒரு பரிதாபத்திற்கு உரிய மனநிலையில் தான் 
என் ஒவ்வொரு வருட ரம்ஜானும் கழிகிறது?
இந்த வருடம் எப்படியோ?





புதன், 31 ஜூலை, 2013

தொலை(ந்த) பேசி

தீப்பெட்டியின் இருமுனைகளிலும்

நூலைக்கட்டி தொலை பேசிய தருணங்களை

சிலாகித்துச் சொன்னால்

சிரிக்கின்றன-இக்காலக்

குழந்தைகள்...

வளர்ந்துவிட்ட தொழில்நுட்பத்தால்

வழக்கொழிந்து போய்விட்டன

சின்னச் சின்ன சந்தோஷங்களும்...! 
 

செவ்வாய், 30 ஜூலை, 2013

வெள்ளந்தி

சைக்கிள் மட்டுமே

ஓட்டத் தெரிந்த

மழைக்கும் பள்ளிக்கு ஒதுங்காத

தூரத்து சொந்தமான

அண்ணன் ஒருவன்

கம்ப்யூட்டர் சொல்லித்தரியா?

என கேட்கையில்

அதிகம் அறிந்து வைப்பதில் தான்

ஆரம்பிக்கிறது சந்தோஷத்தின் முடிவென்று

எப்படி புரிய வைப்பேன்.....

அறியாமை கூட அறிவுதான்

அனைத்தும் அறிந்தவனாய்

எல்லோரையும் எச்சரிக்கையுடன்

ஏறிடும் என் அறிவைக்காட்டிலும்...
.
அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்...

வயதான பின்பும் குழந்தையாய் வாழ...

அவன் வெள்ளந்தியாகவே இருந்துவிடட்டும்...

என்னால் தான் முடியவில்லை!!!
                            சை.மஹபூப்ஜான்


கனகா?

சினிமா பிரபலங்களின் இறப்பை சாதாரண மக்கள் கொண்டாடுகிறார்களா?
அதில் அவர்களுக்கு ஏதேனும் நன்மை விளைய போகிறதா?
பிரபலமாக இருப்பவர்களால் ஒருவரின் மரணம் பிரபலமாக்கப் பட வேண்டுமா?
வாழும்போதே இறுதிச் சடங்கு நடத்தப்படுவது அநேகமாக ஒரு நடிகனின் வாழ்கையில் மட்டுமே....அதில் ஒரு சின்ன மாறுபாடு என்னவென்றால்...இத்தனை நாள் சினிமாவில்.......இப்போது நிஜத்திலும்....
ஒரு நடிகைக்கு புற்று நோய் வரக்கூடாதா?
அப்படியே வந்தாலும் அவள் விரும்பிய இடத்தில் இருந்து சிகிச்சை பெறக்கூடாதா?
இங்கு யாரும் இல்லாத காரணத்தால் கேரளாவுக்கு சென்றார் எனில்.. இங்கிருந்தால் மட்டும் இவர்கள் ஓடிச்சென்று உதவி இருக்கப் போகிறார்களா?
செய்தியை முன்னே தருவதில் இவர்களுக்கு இத்தனை ஆர்வம் எங்கிருந்து வந்தது.....
இவர்களின் போட்டித் தீனிக்கு ஒரு உயிருடன் ஏன் விளையாட்டு..
இதே நிலையில் நம் உறவோ,உடன்பிறப்போ இருப்பின்,ஒருவேளை அவர்கள் முன்கூட்டியே இறந்திருப்பினும் உறுதி செய்ய நேரம் எடுத்துக்கொள்வோம் இல்லையா..
இதே நிலைதான் சமீபத்தில் மஞ்சுளா இறந்த போதும் முதலில் அனுமானத்தில்  செய்தி வெளியிட்டார்கள் ...ஒவ்வொரு நாளும் சூடான விவாதங்களில்,அனல் தெறிக்கும் பேச்சில் நீங்கள் காட்டும் சமுதாய அக்கறை..ஒரு உயிரை பற்றிய தவறான புரிதலை உண்டாகாமல் இருப்பதிலும் காட்டுங்கள்.

#பி .கு: அனைத்து மாநில ஊடகங்களுக்குமானது


நான் ரசித்த சமீபத்திய எழுத்தும்,எழுத்தாளர்களும்.....

             1.ராஜூமுருகன்(வட்டியும் முதலும்)
                                   2.கு.சிவராமன்(ஆறாம் திணை)
                                   3.நம்மாழ்வார்(எந்நாடுடைய இயற்கையே போற்றி)
1.ராஜூமுருகன்:
வாழ்கையை...அதன் சூட்சுமத்தை,தவறவிட்டதை...தவறிவிட்டதை, நாம் நோகடித்தவர்களை,நம்மை நோகடித்தவர்களை,காதலை,நட்பை,வாழ்கையின் சுவாரசியங்களை...என,ஒவ்வொரு...வாரமும்....அழகாக,எளியமொழியில்,தெளிவான...சிந்தனைகளுடன்,ஆழமாக,உணர்ச்சிபூர்வமாக,வடித்து,சமைத்து விருந்தளித்தார் ராஜூமுருகன்.இதை வெறுமனே ஒரு தனி நபரின் வாழ்கை சம்பந்தமான...கட்டுரையாக..கொள்ள...முடியவில்லை.ஒவ்வொரு...நாளும் தொலைக்காட்சி,பத்திரிக்கைகளில் வரும் இராசி பலன்களை போல,ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவரின் வாழ்கையை திரும்பி பார்க்க வைத்தது வட்டியும் முதலும்.....!

2.கு.சிவராமன்:
     உண்பதற்காக வாழாதே..வாழ்வதற்காக உண்....என்றார் சாக்ரடீஸ்.
உணவே மருந்து என்பது நாம் அறிந்ததே...எந்த மருத்துவர் சிறந்த மருந்தை,நோய்நீக்கியை பரிந்துரைக்கிராரோ,அவரே சிறந்த மருத்துவர் அந்தவகையில்,பாரம்பரிய மற்றும் கலாசார உணவு முறைகள் குறித்தும் எதை உண்ண வேண்டும்....எப்படி உண்ண வேண்டும் என போதித்து தெளிவாக விளக்கிய சிவராமனே என் மனங்கவர்ந்த மருத்துவர்..இன்னும் சொல்லப் போனால் “புத்திசாலித்தனமாக உண்பதே ஒரு கலை” என புரிய வைத்த மருத்துவ கலைஞன் ...

3.நம்மாழ்வார்:
     இயற்கையை பாதுகாக்க வந்த இன்னொரு பகலவன்....சிட்டுக்குருவிக்காகவும் கூட கவலைப்படும் சித்தன்...இயற்கை விவசாயத்தை போதித்து வாழும் புத்தன்...அனைவராலும் போற்றப்பட வேண்டிய பொக்கிஷம்...!அவருக்கு தரப்படும் மரியாதை...இயற்கை அன்னைக்கு தரப்படும் மரியாதை......

                                                -சை.மஹபூப்ஜான்    
UA-43378410-1