"தீதும் நன்றும் பிறர் தர வாரா........"

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

பிரியாணி-A Middle class Diet!


வந்துவிட்டது ரம்ஜான்!
ரம்ஜான் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது
அல்லாவும் அல்ல,இஸ்லாமும் அல்ல..
வேறென்ன “பிரியாணி” தான்...
இஸ்லாமியர்களின் ஆகச் சிறந்த உணவாக அது எப்போதோ
அடையாளப்படுத்தப் பட்டுவிட்டது.அதிலும் அவர்களின் கைமணத்தில்
உருவாகும் பிரியாணிகளுகென்று அங்கீகரிக்கபடாத ரசிகர் மன்றங்களே
உண்டு.ஒரு படத்தில் நடிகர் சிங்கமுத்து வாணியம்பாடி பஷீர் பாய் வீட்டு
கல்யாண பத்திரிக்கையை வைத்து ரகளை செய்து சிரிக்க வைப்பாரே
அதுபோல .
ஆனால்.....!?
ரம்ஜான் எல்லா இசுலமியர்களுக்கும் சிறப்பான அனுபவத்தை
தந்துவிடுவதில்லை..அது சிலருக்கு வரம் ...சிலருக்கு சாபம்..
ரம்ஜான் என்னை ஓடி ஒளிய வைத்திருக்கிறது,பொய் சொல்ல
வைத்திருக்கிறது,செல்போனை நாள் முழுக்க சுவிட்ச் ஆஃப் செய்ய
வைத்திருக்கிறது.
பணக்காரர்களுக்கும்,மிகவும் அடித்தட்டு இஸ்லாமியர்களும் அது வரம்!
பணக்காரர்களுக்கு ஏழைகளுக்கு தானம் செய்வதில் அல்லாவின் கருணை
பெற்றுவிட்டதாய் ஆனந்தம்! அடித்தட்டு இசுலாமியர்களுக்கோ நிச்சயம்
ஏதாவது ஒரு வழியில் உதவி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை!
அப்படியானால் யாருக்கு அது சாபம்??
நிச்சயமாக என்னால் சொல்ல முடியும் அது மிடில் கிளாஸ்
இசுலாமியர்களுக்குத் தான்!
யாரிடமும் யாசகம் கேட்பதில் அவர்களுக்கு துளி விருப்பமும்
இருப்பதில்லை..தானாக வந்து உதவி செய்பவர்களின் உதவியை பெற
அவர்களின் சுய கெளரவமும் இடம் தருவதில்லை.
“மச்சி நாளைக்கு எத்தனை மணிக்கு வரட்டும்” என்று ரம்ஜானுக்கு முந்தின
நாள் நண்பன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வட்டிக்கு கடன் வாங்க
சென்ற அப்பா வரும்வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது.வெற்றிகரமாக
அப்பா பணத்தோடு வரும்போது ஏற்படும் பெருமூச்சு அடங்குவதற்குள்
“நம்ம வீட்டு அளவுல  மட்டும் தான் செய்ய போறோம் யாரையும்
கூப்பிட்டுடாத” என்று அம்மா அடுத்த குண்டைவீசுகையில் தலை தொங்கிப்
போகும் .இந்த லட்சணத்தில் ரம்ஜான் செலவுக்கு பணம் கேட்கும் தம்பி
தங்கைகள் வேறு!
அந்த ஒருநாள் போலீசில் சிக்கிய பாலியல் தொழிலாளி
முகத்தை துணியால் மறைத்து செல்வது போலவும்,அந்தி சாய்ந்ததும்
வெளியே செல்லும் கடன்காரனுக்குமானதாய் இருவேறு மனநிலைகளில்
எதிரில் வரும் நண்பனை ஏறிட முடியாமல்
சிக்கித்தவிக்கும் ஒரு பரிதாபத்திற்கு உரிய மனநிலையில் தான் 
என் ஒவ்வொரு வருட ரம்ஜானும் கழிகிறது?
இந்த வருடம் எப்படியோ?





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

UA-43378410-1