"தீதும் நன்றும் பிறர் தர வாரா........"

புதன், 31 ஜூலை, 2013

தொலை(ந்த) பேசி

தீப்பெட்டியின் இருமுனைகளிலும்

நூலைக்கட்டி தொலை பேசிய தருணங்களை

சிலாகித்துச் சொன்னால்

சிரிக்கின்றன-இக்காலக்

குழந்தைகள்...

வளர்ந்துவிட்ட தொழில்நுட்பத்தால்

வழக்கொழிந்து போய்விட்டன

சின்னச் சின்ன சந்தோஷங்களும்...! 
 

செவ்வாய், 30 ஜூலை, 2013

வெள்ளந்தி

சைக்கிள் மட்டுமே

ஓட்டத் தெரிந்த

மழைக்கும் பள்ளிக்கு ஒதுங்காத

தூரத்து சொந்தமான

அண்ணன் ஒருவன்

கம்ப்யூட்டர் சொல்லித்தரியா?

என கேட்கையில்

அதிகம் அறிந்து வைப்பதில் தான்

ஆரம்பிக்கிறது சந்தோஷத்தின் முடிவென்று

எப்படி புரிய வைப்பேன்.....

அறியாமை கூட அறிவுதான்

அனைத்தும் அறிந்தவனாய்

எல்லோரையும் எச்சரிக்கையுடன்

ஏறிடும் என் அறிவைக்காட்டிலும்...
.
அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்...

வயதான பின்பும் குழந்தையாய் வாழ...

அவன் வெள்ளந்தியாகவே இருந்துவிடட்டும்...

என்னால் தான் முடியவில்லை!!!
                            சை.மஹபூப்ஜான்


கனகா?

சினிமா பிரபலங்களின் இறப்பை சாதாரண மக்கள் கொண்டாடுகிறார்களா?
அதில் அவர்களுக்கு ஏதேனும் நன்மை விளைய போகிறதா?
பிரபலமாக இருப்பவர்களால் ஒருவரின் மரணம் பிரபலமாக்கப் பட வேண்டுமா?
வாழும்போதே இறுதிச் சடங்கு நடத்தப்படுவது அநேகமாக ஒரு நடிகனின் வாழ்கையில் மட்டுமே....அதில் ஒரு சின்ன மாறுபாடு என்னவென்றால்...இத்தனை நாள் சினிமாவில்.......இப்போது நிஜத்திலும்....
ஒரு நடிகைக்கு புற்று நோய் வரக்கூடாதா?
அப்படியே வந்தாலும் அவள் விரும்பிய இடத்தில் இருந்து சிகிச்சை பெறக்கூடாதா?
இங்கு யாரும் இல்லாத காரணத்தால் கேரளாவுக்கு சென்றார் எனில்.. இங்கிருந்தால் மட்டும் இவர்கள் ஓடிச்சென்று உதவி இருக்கப் போகிறார்களா?
செய்தியை முன்னே தருவதில் இவர்களுக்கு இத்தனை ஆர்வம் எங்கிருந்து வந்தது.....
இவர்களின் போட்டித் தீனிக்கு ஒரு உயிருடன் ஏன் விளையாட்டு..
இதே நிலையில் நம் உறவோ,உடன்பிறப்போ இருப்பின்,ஒருவேளை அவர்கள் முன்கூட்டியே இறந்திருப்பினும் உறுதி செய்ய நேரம் எடுத்துக்கொள்வோம் இல்லையா..
இதே நிலைதான் சமீபத்தில் மஞ்சுளா இறந்த போதும் முதலில் அனுமானத்தில்  செய்தி வெளியிட்டார்கள் ...ஒவ்வொரு நாளும் சூடான விவாதங்களில்,அனல் தெறிக்கும் பேச்சில் நீங்கள் காட்டும் சமுதாய அக்கறை..ஒரு உயிரை பற்றிய தவறான புரிதலை உண்டாகாமல் இருப்பதிலும் காட்டுங்கள்.

#பி .கு: அனைத்து மாநில ஊடகங்களுக்குமானது


நான் ரசித்த சமீபத்திய எழுத்தும்,எழுத்தாளர்களும்.....

             1.ராஜூமுருகன்(வட்டியும் முதலும்)
                                   2.கு.சிவராமன்(ஆறாம் திணை)
                                   3.நம்மாழ்வார்(எந்நாடுடைய இயற்கையே போற்றி)
1.ராஜூமுருகன்:
வாழ்கையை...அதன் சூட்சுமத்தை,தவறவிட்டதை...தவறிவிட்டதை, நாம் நோகடித்தவர்களை,நம்மை நோகடித்தவர்களை,காதலை,நட்பை,வாழ்கையின் சுவாரசியங்களை...என,ஒவ்வொரு...வாரமும்....அழகாக,எளியமொழியில்,தெளிவான...சிந்தனைகளுடன்,ஆழமாக,உணர்ச்சிபூர்வமாக,வடித்து,சமைத்து விருந்தளித்தார் ராஜூமுருகன்.இதை வெறுமனே ஒரு தனி நபரின் வாழ்கை சம்பந்தமான...கட்டுரையாக..கொள்ள...முடியவில்லை.ஒவ்வொரு...நாளும் தொலைக்காட்சி,பத்திரிக்கைகளில் வரும் இராசி பலன்களை போல,ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவரின் வாழ்கையை திரும்பி பார்க்க வைத்தது வட்டியும் முதலும்.....!

2.கு.சிவராமன்:
     உண்பதற்காக வாழாதே..வாழ்வதற்காக உண்....என்றார் சாக்ரடீஸ்.
உணவே மருந்து என்பது நாம் அறிந்ததே...எந்த மருத்துவர் சிறந்த மருந்தை,நோய்நீக்கியை பரிந்துரைக்கிராரோ,அவரே சிறந்த மருத்துவர் அந்தவகையில்,பாரம்பரிய மற்றும் கலாசார உணவு முறைகள் குறித்தும் எதை உண்ண வேண்டும்....எப்படி உண்ண வேண்டும் என போதித்து தெளிவாக விளக்கிய சிவராமனே என் மனங்கவர்ந்த மருத்துவர்..இன்னும் சொல்லப் போனால் “புத்திசாலித்தனமாக உண்பதே ஒரு கலை” என புரிய வைத்த மருத்துவ கலைஞன் ...

3.நம்மாழ்வார்:
     இயற்கையை பாதுகாக்க வந்த இன்னொரு பகலவன்....சிட்டுக்குருவிக்காகவும் கூட கவலைப்படும் சித்தன்...இயற்கை விவசாயத்தை போதித்து வாழும் புத்தன்...அனைவராலும் போற்றப்பட வேண்டிய பொக்கிஷம்...!அவருக்கு தரப்படும் மரியாதை...இயற்கை அன்னைக்கு தரப்படும் மரியாதை......

                                                -சை.மஹபூப்ஜான்    
UA-43378410-1